மாநில அளவிலான நகைச்சுவை போட்டிக்கு குன்னூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு

மாநில அளவிலான நகைச்சுவை போட்டிக்கு குன்னூர் அரசு பள்ளி மாணவர் தேர்வாகி உள்ளார்.

Update: 2022-12-22 18:45 GMT

ஊட்டி

மாநில அளவிலான நகைச்சுவை போட்டிக்கு குன்னூர் அரசு பள்ளி மாணவர் தேர்வாகி உள்ளார்.

கலைத் திருவிழா

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கலைத் திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

இதன்பின்னர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதலிடம் பெறுபவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் அந்தந்த மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள். நீலகிரி மாவட்டம் இதில் குன்னூர் சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கோபி கிருஷ்ணன் மாநில அளவிலான நகைச்சுவை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

இவர் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பல்வேறு அறிவார்ந்த கருத்துக்களை நகைச்சுவையாகவும், சினிமா பாடல் மெட்டிலும் விளக்கி கூறினார். மாநில அளவிலான போட்டி வருகிற 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தற்போது தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். மாணவர் கோபிகிருஷ்ணன் காற்றுக் கருவி வாசித்தலிலும் மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோபிகிருஷ்ணன் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர்கள் சுசீலா, புஷ்பா, சித்ரா, ஹேமலதா, குணவதி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பிரியா, சுகுணா மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

நெகிழ்ச்சி

மாணவர் கோபி கிருஷ்ணனின் பெற்றோர் யோகராஜ்- ஜானகி தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவரின் தந்தை யோகராஜ் விபத்தில் சிக்கி வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். இவ்வளவு மன சோர்வான சூழ்நிலையிலும், மற்றவர்களை சிரிக்க வைக்கும் பணியில் கோபி கிருஷ்ணன் சிறப்பாக ஈடுபட்டு வருவது நெகிழ்ச்சியையும் வாழ்க்கை மீது அவருக்குள்ள தன்னம்பிக்கையையும் காட்டுவதாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்