சமையல் மாஸ்டர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலம்

சீர்காழி அருகே சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு படை வீரரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-04 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு படை வீரரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமையல் மாஸ்டர் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன்(வயது 27). சமையல் மாஸ்டர். இவர் கடந்த 2-ந் தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

துப்பாக்கியால் சுட்டுக்கொலை

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், கனிவண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. கொலை செய்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தையும், போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து போலீசார் கொலையாளியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் அனுமதி பெற்று யார், யாரெல்லாம் துப்பாக்கி வைத்துள்ளார்களோ, அவர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கியோடு சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவித்தனர்.

டி.ஐ.ஜி. முகாம்

அதன்படி பலர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காண்பித்து சென்றனர். இதனிடையே கொலை வழக்கு தொடர்பாக சீர்காழியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சமையல் மாஸ்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது சீர்காழி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் சீர்காழி பகுதியில் முகாமிட்டு கொலை செய்யப்பட்ட கனிவண்ணனின் செல்போன் பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்