சமையல் எரிவாயு விலை உயர்வு: ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது - அன்புமணி ராமதாஸ்
சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1,068.50-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. மே மாதம் 7ஆம் தேதி சிலிண்டர் விலை தொடக்கத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1, 015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகி வந்தது. பிறகு அதே மாதத்தில் 19ஆம் தேதி மீண்டும் 3 ரூபாய் உயர்ந்து, 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,018.50 காசுகளுக்கு ஆக விற்கப்பட்டு வந்தது. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.
சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.710 ஆக இருந்த உருளை விலை இதுவரை ரூ.305 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 50.44% உயர்வு ஆகும். இவ்வளவு விலை உயர்வை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை உயரவில்லை. இந்தியாவில் இன்று கூட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8.50 குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும். உலக சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்?
உஜ்வாலா வகை இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு மானியத்தை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், விலை உயர்த்தப்படுவது மக்களுக்கு நன்மை பயக்காது. விலை உயர்வை ரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்!" என்று அதில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.