அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 794 மாணவர்களுக்கு பட்டம்
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 794 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நெல்லை மண்டல கல்லூரிகளில் 2020-21-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். ஷோஹோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். இதில் 794 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 123 பேர் முதுநிலை பட்டமும், 671 பேர் இளநிலை பட்டமும் பெற்றனர். அவர்களில் 17 பேர் பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வாங்கினர். பல்கலைக்கழக நெல்லை மண்டல முதல்வர் செண்பக விநாயகமூர்த்தி அறிக்கை வாசித்தார்.
விழாவில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், உறுப்பு கல்லூரிகளின் மைய இயக்குனர் அரிகரன், தூத்துக்குடி முதல்வர் பீட்டர் தேவதாஸ், நாகர்கோவில் முதல்வர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.