ஆலங்குளம்:
ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா மற்றும் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழாவானது பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சந்தன குமார பாண்டியர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் பேராசிரியர் அமுதவாணன், கல்லூரியின் செயலாளர் பேராசிரியர் எழில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பொறியியல் கல்லூரியில் 360 மாணவர்கள் இளநிலை பட்டமும், 35 மாணவர்கள் முதுநிலை பட்டமும் பெற்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 178 மாணவர்கள் இளநிலை பட்ட சான்றிதழை பெற்றனர். பின்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மூன்று மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வர் வேலாயுதம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முருகேசன், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் மாரியப்பன், கணிதத்துறை தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.