கடந்த 3 மாதங்களில் 30 போக்சோ வழக்குகளில் தண்டனை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 30 போக்சோ வழக்குகளுக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-16 19:37 GMT


விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 30 போக்சோ வழக்குகளுக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தனி போக்சோ நீதிமன்றங்கள் உள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் தலா 300-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் தான் 874 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 688 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில் 495 போக்சோ வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 440 போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் 300 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் 2 போக்சோ நீதிமன்றங்களும், 100 வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு போக்சோ நீதிமன்றமும் மாவட்டங்களில் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மகளிர் நீதிமன்றம்

தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், திருநெல்வேலியில் கூடுதலாக ஒரு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் போக்சோ நீதிமன்றமும், மகளிர் நீதிமன்றமும் போக்சோ வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு வரை நிலுவையில் இருந்த அனைத்து போக்சோ வழக்குகளும் விசாரித்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது 2023-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

தாமதிக்காமல் விசாரணை

அதிலும் கடந்த 3 மாதங்களில் 93 போக்சோ வழக்குகள் விசாரிக்கப்பட்டு 30 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட விருதுநகர் மாவட்டத்தில் தான் போக்சோ வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தை பொறுத்தமட்டில் போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகள் உரிய முறையில் தாமதிக்காமல் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் நிலை உள்ளது. மற்ற மாவட்டங்களில் போக்சோ வழக்கு விசாரணை தாமதமாகும் நிலை உள்ளது என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்