புதிய குடோனுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றம்

Update: 2023-07-01 23:03 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய குடோனுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றும் பணி நடந்து வருகிறது.

புதிய குடோன்

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைப்பதற்கான குடோன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 642 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 3 தளங்களை கொண்டது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் காவலர் அறை, முதல் நிலை சோதனை அறை, 2-ம் நிலை சோதனை அறை, அலுவலக அறை, பயிற்சி கூடம், சேமிப்பு கிடங்கு, கழிப்பறைகள் போன்றவை உள்ளன. இந்த புதிய கட்டிடத்தை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து தோவாளை மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள குடோனுக்கு மாற்றப்படும் பணி தொடங்கியது.

பூட்டி 'சீல்'

அந்த வகையில் நேற்று முன்தினத்தில் இருந்து 2 இடங்களில் இருந்தும் டெம்போக்கள் மற்றும் லாரிகள் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிய கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டன. திங்கள்சந்தையில் இருந்த அனைத்து எந்திரங்களும் நேற்று முன்தினமே கொண்டு வரப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய குடோனில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.

இதே போல தோவாளையில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த பணிகள் தேர்தல் தாசில்தார் சுசீலா முன்னிலையில் நடந்தன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டதும் அந்த அறையை பூட்டி 'சீல்' வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்