தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: எம்.பி. கனிமொழியின் பதிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் தமிழ் மக்களை காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-28 03:31 GMT

சென்னை,

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்றி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், இந்நிகழ்வின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டரில் "தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழியின் பதிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே.

நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?. கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்!" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்