பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: எஸ்.வி. சேகரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாகவும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு ராஜரத்தினம் என்பவர் புகார் செய்தார். இதன்படி பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில் எம்ஜிஆர் சிலைக்கு காவி சால்வை போர்த்திய செயலை களங்கம் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியதால், அதற்கு நான் சில கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டேன்.
ஆனால் ஒரு போதும் தேசியக்கொடியை அவமதிக்கவில்லை. எனவே எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த், வெங்கடேஷ், எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.