பொள்ளாச்சியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Update: 2022-09-30 18:45 GMT

பொள்ளாச்சி

நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.

சாலையோர வியாபாரிகள்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழைநீர் வடிகால் சீரமைத்தல், சிறு பாலம் கட்டுதல், குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுதல் உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா:-பாதாள சாக்கடை பணிகள் தென்வடல் ராஜா மில் ரோடு பகுதிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை எனது வார்டிலும் மேற்கொள்ள வேண்டும். சாலையோர வியாபாரிகளின் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே அந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் தங்கவேல்:- லட்சுமாபுரம், சோமசுந்தராபுரம், பொட்டுமேடு பகுதிகளில் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

நாய் தொல்லை

கவுன்சிலர் தேவகி:- பொள்ளாச்சி நகராட்சியில் சாலை, சிறு பாலம், கட்டிடங்கள், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பயன்படுத்தும் பொருட்கள், வேலை தரமற்றவையாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன்.

கவுன்சிலர் துரைபாய்:- நகரின் அனைத்து பகுதிகளிலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகளை பிடித்து தூக்கி கொண்டு சென்று விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

பெருமாள்:- திரு.வி.க. மார்க்கெட், லாரி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இ

கவுன்சிலர் செந்தில்:- வி.ஐ.பி. கார்டன், ஜோதி நகர் பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பராமரிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்

ஆணையாளர் தாணுமூர்த்தி:- நாய்களை பிடிக்க விலங்கு வாரியத்தில் கட்டுபாடுகள் உள்ளது. எனவே அரசுக்கு கடிதம் எழுதி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்நிலை மார்க்கெட்டில் கடைகள் கட்டப்பட உள்ளது என்றார்.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- நகராட்சி பகுதிகளில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்