நெற்பயிரில் புகையான் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை
நெற்பயிரில் புகையான் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
விருத்தாசலம்,
குறிஞ்சிப்பாடி அருகே கொத்தவச்சேரி கிராமத்தில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் புகையான் நோயால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் வேளாண் விஞ்ஞானிகள் செங்குட்டுவன், நடராஜன் மற்றும் குறிஞ்சிப்பாடி வேளாண்மை துறை அதிகாரிகள் புகையான் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்த விவசாயிகளிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பி.பி.டி. 5204 என்ற நெல் ரகம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
மாற்று ரகம்
இந்த சம்பா பட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த உடனடியாக வயலில் உள்ள தண்ணீரை வடித்து, பட்டம் பிரித்து மற்ற இடங்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம். மேலும் உடனடியாக 2 லிட்டர் மண்எண்ணெயை 3 கிலோ மணலுடன் கலந்து பாதிக்கப்பட்ட பயிரில் மட்டும் சீராக தூவி கட்டுப்படுத்தலாம். இது தவிர பைமெட்ரோசின் 50 டபிள்.யு.ஜி. 120 கிராம் ஒட்டுதிரவத்துடன் கலந்து தண்டின் அடிப்பகுதி நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் பி.பி.டி. 5204 என்ற ரகமானது புகையான் தாக்குதலுக்கு உகந்தது. எனவே மாற்று ரகமாக வேளாண்மை துறையின் மூலம் பரிந்துரைக்கபடும் டி.கே.எம்.13 ரகத்தை பயிரிடலாம். அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பசலனம் குறைவு ஆகியவை இந்த புகையான் நோய் தாக்குதலுக்கு காரணமாக இருக்கிறது. சில இடங்களில் பைரிதிராய்டு தெளித்ததனாலும், ஆர்கானிக் உரம் என்று சொல்லகூடிய மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து குறைவாக உள்ள உரத்தினை பயன்படுத்தியதாலும் புகையான் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதை தவிர்க்க மணிச்சத்து, சாம்பல் சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை விவசாயிகள் அனைவரும் கடைபிடித்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றனர்.