ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Update: 2023-08-03 18:45 GMT


மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் வடமாநில தொழிலாளர்கள் 80 பேரை ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் 124 தூய்மை பணியாளர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் புதிதாக பணியமர்த்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 19 பேர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தும், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக போலீசார் அளித்த உத்தரவாதத்தின் பேரில் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தமால் நேற்றும் வடமாநில தொழிலாளர்கள் மூலம் தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முயற்சித்துள்ளது. இதனைக்கண்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகர பூங்காவில் குப்பை சேகரிக்கும் வாகனங்களை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சியின் நிரந்தர பணியாளர்கள் வேலை செய்தால் வாகனத்தை அனுப்புவோம் எனவும், வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பினால் வாகனத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறினர். அதைதொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தமாட்டோம் என்று நகராட்சி அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் பேரில் சிறைபிடித்த வாகனங்களை விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்