ஆனைக்குட்டம் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறும் நிலை

ஆனைக்குட்டம் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது.

Update: 2022-10-18 19:34 GMT

ஆனைக்குட்டம் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது.

ஆனைக்குட்டம் அணை

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் அணை கடந்த 1990-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சராக சாத்தூர் ராமச்சந்திரன் இருந்தார். இந்த அணை பாசனத்திற்கு பயன்பட்டாலும் விருதுநகரின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் என்ற அடிப்படையில் இந்த அணை கட்டப்பட்டது.

இந்த அணை படுகையில் உறை கிணறுகள் தோண்டப்பட்டு அங்கிருந்து விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஆனைக்குட்டம் அணைப்பகுதி தான் விருதுநகருக்கான பிரதான குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது.

தொடர் நீர்க்கசிவு

இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் நிலை தொடர்கிறது. இடையில் இதனை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பயனில்லை. தொடர்ந்து தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் தண்ணீர் வெளியேறும் நிலையில் முத்து குளிக்கும் வீரர்களை அழைத்து வந்து நீர் வெளியேறும் ஷட்டர்களில் மணல்மூடைகளை வைத்து அடைக்கும் நடைமுறையை பொதுப்பணித்துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர். தற்போது தொடர்மழையால் இ்ந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போதும் அணையில் 7.5 மீட்டர் நீர்மட்டம் உள்ள நிலையில் 2 ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை அடைப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. இவ்வாறு அணையில் நீரை தேக்கி வைக்க முடியாமல் நீர் வெளியேறும் நிலையில் அணை பாசனத்திற்கும் பயன்படாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த அணையில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்க அரசிடம் இருந்து சிறப்பு நிதி உதவி பெற்று ஷட்டரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்