தொடர் மழைக்கு இதுவரை 108 வீடுகள் இடிந்து விழுந்தன

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழைக்கு இதுவரை 108 வீடுகள் இடிந்து விழுந்தன. கோழிப்போர்விளையில் 92.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2023-10-18 21:57 GMT

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மழை தொடர்ந்தது. இந்த மழை பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிபாறை அணை- 53.6, பெருஞ்சாணி அணை- 57.4, சிற்றார்-1 அணை- 18. சிற்றார்-2 அணை- 25.6, புத்தன் அணை54.6, மாம்பழத்துறையாறு அணை- 41.8, முக்கடல் அணை- 22.2, பூதப்பாண்டி-22.4, களியல்-35.8, கன்னிமார்- 41.8, கொட்டாரம்- 17.4, குழித்துறை- 11.6, மயிலாடி-16.4, நாகர்கோவில்-19.4, சுருளோடு-46.4, தக்கலை-55, குளச்சல்-18.4, இரணியல்- 26, பாலமோர்- 52.2, திற்பரப்பு- 33.8, ஆரல்வாய்மொழி- 7.2, கோழிப்போர்விளை-92.8, அடையாமடை- 49.1, குருந்தங்கோடு-26, முள்ளங்கினாவிளை- 57.4, ஆனைக்கிடங்கு- 38.4 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கோழிப்போர்விளை பகுதியில் 92.8 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது.

இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,570 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 226 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,116 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 329 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 129 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 19 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.9 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 103 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் நான்கு வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் இடிந்துள்ளது. தொடர்மழைக்கு இதுவரை 108 வீடுகள் இடிந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் ஷீட்டின் விலை கடந்த ஒரு வார காலமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. ரப்பர் வியாபாரி விலையாக இம்மாதம் முதல் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பர் கிலோ ரூ.141.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ.137.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ.121.50 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் இந்த விலை படிப்படியாக அதிகரித்து நேற்றைய நிலவரப்படி ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ.147.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ.144 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ.128.50 ஆனது.

மேலும் ரப்பர் போர்டு விலையாக (கோட்டயம் - கொச்சி) ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ.152.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ.149 ஆகவும், ஐ.எஸ்.என்.ஆர். 20 விலை கிலோ ரூ.137 ஆகவும், டேட்டக்ஸ் 60 % விலை கிலோவிற்கு ரூ 118.90 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்