நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்தது.

Update: 2023-07-26 21:30 GMT

பவானிசாகர்

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்தது.

விவசாய நிலங்கள்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக இருப்பது பவானிசாகர் அணை. அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் வறண்ட வானிலை காணப்பட்டதால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சரிய தொடங்கியது.

2அடி உயர்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

கடந்த 24-ந்தேதி மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 738 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

மகிழ்ச்சி

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 அடி உயர்ந்து 81.91 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 327 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்