தொடர் மழை:1000 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை
தொடர் மழை மற்றும் காற்றினால் சிறுபாக்கம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாங்குளம், மலையனூர், மங்களூர், மா.குடிகாடு, அரசங்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்ததால், இந்தாண்டு அதிக வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர்மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக சிறுபாக்கம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அதிக செலவு செய்து நாங்கள் மக்காச்சோள பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம்.
நிவாரணம்
இந்த நிலையில் தொடர் மழை மற்றும் காற்றினால் சுமார் 1000 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்து விட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பெரும் கவலை அடைந்துள்ளோம். கஷ்டப்பட்டு வளர்த்து வந்த மக்காச்சோள பயிர்கள் எங்களது கண்முன்னே கீழே சாய்ந்து விழுந்து மண்ணோடு மக்கி வீணாகி விட்டது.
இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. இதை தவிர்க்க சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.