பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு வினாடிக்கு 7,182 கன அடி தண்ணீர் வருகிறது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Update: 2022-07-06 15:26 GMT

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை, தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 861 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 83.25 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 182 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 83.75 அடியாக உயர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் அரை அடி தண்ணீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்