தஞ்சை மாவட்டத்தில் மழை நீடிப்பு
தஞ்சை மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. மழையின் காரணமாக 2 வீடகள் இடிந்து சேதமடைந்தன.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வெயில் காணப்பட்டது. மதியம் 3 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் 4 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால் வெளியே சென்றிருந்தவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர். பின்னர் சிறிது நேரம் மழை இன்றி காணப்பட்டது. பின்னர் மீண்டும் மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
2 வீடுகள் இடிந்தன
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சையில் 28 மில்லி மீட்டரும், வல்லத்தில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு ஒரு குடிசை வீடும், ஒரு ஓட்டு வீடும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதேபோல தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மழையின் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நெல் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டன. கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வல்லம்-திருவையாறு
தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 2 மணிநேரம் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையினால் மாலைநேரத்தில் ரோட்டு ஓரத்தில் கடை போடும் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.