தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி
கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம்கொள்ளிடத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் பயிற்சி வட்டார வள மையத்தில் நடந்தது. இப்பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி வரவேற்றார். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக இரவி,அமுல்ராஜ்,பிரியா முருகவேல்,கம்பன்,செல்வராஜ், கலைச்செல்வன்,பாலகிருஷ்ணன், செந்தாமரை ஆகியோர் ஈடுபட்டனர். பயிற்சியில் கலந்து கொண்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி பேசுகையில், தொடக்க நிலை ஆசிரியர்கள் வயதானலும் மனரீதியாக ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் மாணவர்கள் தான். தொடக்க நிலை ஆசிரியர்கள் தான் முதலில் மாணவர்களிடம் உள்ள உடல் ரீதியான குறைபாடுகளை கண்டறிகின்றார்கள். அதற்கு பிறகு அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த முடிகின்றது. அனைவரும் இணைந்து சிறந்த சமூகத்தை ஏற்படுத்துவோம் என்றார். இதில் வட்டார அளவிலான 140 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாக்கியலெட்சுமி செய்திருந்தார். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.