வாலிபருக்கு ரூ.20 ஆயிரம்நஷ்டஈடு வழங்க வேண்டும்-நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

ஓட்டலில் மது குடிக்க சேவை கட்டணம் வசூல் தொடர்பாக வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-04-13 21:50 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மது அருந்த சென்றார். அவர்கள் ரூ.1,600-க்கு மது வாங்கி அருந்தி உள்ளனர். அதற்கு வரி ரூ.232, சேவை கட்டணம் ரூ.80 சேர்த்து மொத்தம் ரூ.1,912 வசூலித்து உள்ளனர். அப்போது அந்த வாலிபர் ஓட்டல் ஊழியரிடம், மத்திய அரசு நுகர்வோர் விவகாரத்துறை ஆணைப்படி நுகர்வோரிடம் சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதனால் தன்னிடம் கூடுதலாக வசூலித்த ரூ.80-ஐ திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதை கொடுக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த வாலிபர் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தனர். அதில், ரூ.80 சேவை கட்டணம் வசூலித்தது முறையற்ற வாணிபம். எனவே வாலிபருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்