மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலை வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் தலைமை தாங்கினார். கரும்பு பெருக்கு அலுவலர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, திருவண்ணாமலை மாவட்ட அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் பேராசிரியர்கள் துரைசாமி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு மகசூலை அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் கரும்பு பயிரை தாக்கும் நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, சொட்டு நீர் பாசன முறையை எவ்வாறு பயன்படுத்துவது, மழைக்காலங்களில் சேதமான பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசு சார்ந்த திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் வேளாண் அலுவலர் ஆனந்தன், சாய்சமித்தா, உதவி விதை அலுவலர் முருகேசன், உதவி தொழில் நுட்ப மேலாளர் மேரிஆனந்தி, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு அலுவலர்கள் ஏழுமலை, ராகவன் மற்றும் ஆலை நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.