மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க கலந்தாய்வு
வால்பாறை அருகே அட்டகட்டியில் உள்ள வனமேலாண்மை பயிற்சி மையத்தில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வால்பாறை
வால்பாறை அருகே அட்டகட்டியில் உள்ள வனமேலாண்மை பயிற்சி மையத்தில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு கூட்டம்
வால்பாறை அருகே அட்டகட்டியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் நவீன வனமேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இங்கு கோவை மாவட்ட வனப்பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை கள இயக்குனர் ஆகியோரின் அறிவுரையின்பேரில் மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் இறப்பதை தடுக்கவும் குறிப்பாக யானைகள் அதிகளவில் இறப்பதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அனைத்து துறையினருக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பதற்கான காரணங்கள் குறித்து படக்காட்சியுடன் விளக்கப்பட்டது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வனத்துறையினர் விளக்கினர்.
மின்வேலி
இதில், மின்கம்பிகள் மீது பாதுகாப்பு பூச்சுகள் பூசப்பட வேண்டும். முடிந்தவரை மின் ஒயர்களை பூமிக்கு அடியில் பதிப்பது, யானைகள் தும்பிக்கையை நீட்டினால் மின் கம்பிகள் படாதவாறு உயரத்தில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக மின்வேலிகள் அமைக்கும் போது அரசு அனுமதித்துள்ள அளவு மின்சாரம் மின் வேலிகளில் பாய்ச்சப்படுகிறதா என்பதை வனத் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் போதிய உயரத்தில் தொய்வு இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் அமைந்துள்ள இடங்களில் அமைக்கப்படும் மின்வேலி அமைக்கும் நிறுவனத்தின் தகவல் சேகரித்து வைக்க வேண்டும்.
ஆய்வு செய்ய வேண்டும்
அனைத்து எஸ்டேட் பகுதியிலும் நிர்வாகங்கள் ஆய்வு மேற்கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் மின்கம்பிகள், மின் கம்பங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களுக்கும், மலைவாழ் கிராம மக்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வருவாய் துறையினர், போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்து யானைகள் வழித்தடத்தில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு மின்கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.
கூட்டத்தில் ஆனைமலை வால்பாறை பகுதி மின்வாரிய பொறியாளர்கள், வால்பாறை உட்கோட்ட போலீசார், பொள்ளாச்சி உட்கோட்ட வனச்சரகர்கள் மணிகண்டன், புகழேந்தி, வெங்கடேஷ், திருச்செல்வம், வனத்துறை கால்நடை டாக்டர் விஜயராகவன், வால்பாறை, ஆனைமலை வருவாய் துறையினர் இந்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு முகாமில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய வனச்சரகர் பாஸ்கரன் தலைமையில் வனத் துறையினர் செய்திருந்தனர்.