திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலந்தாய்வு
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது.
சென்னை:
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுப்பாதை அமைத்தல் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தொடர்புடைய துறைகளின் அனுமதி பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.