கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களுடனான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களுடனான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவசாயிகள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி வடக்கு கரும்பு கோட்டத்திற்குட்பட்ட சிறுவங்கூர் கிராமத்தில் நடைபெற்றது. கரும்பு அலுவலர் சஞ்சீவி வரவேற்று பேசினார். மேலாண்மை இயக்குனர் முருகேசன் தலைமை தாங்கி பேசும்போது, விவசாயிகள் கரும்பை நன்கு பராமரிப்பதன் மூலம், வெட்டுக்கூலியை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்றும், நியாயமான வெட்டுக்கூலியை மட்டுமே கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் நிரந்தரமாக பெற வேண்டும். கரும்பை எரித்து அறுவடை செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அனைத்து கரும்பு வெட்டும் தொழிலாளர்களும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய கரும்பு அபிவிருத்தி அலுவலர் செந்தில்குமார், நியாயமான வெட்டுக்கூலியால் மட்டுமே நிலையான கரும்பு பதிவு பரப்பை உறுதி செய்ய முடியும் என்றார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கோட்ட களப்பணியாளர் ஜனார்த்தனன், கரும்பு பெருக்கு உதவியாளர் விஜயன், கரும்பு உதவியாளர் ஆகியோர் செய்திருந்தனர்.