நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-06-06 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந்தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் தீட்சிதர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு சப்-கலெக்டர் ஸ்வேதா சுமன் தலைமை தாங்கினார். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேரோட்டத்தின் போது காவல் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, தேரோடும் வீதிகளை சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் கடைகளை மூட...

மேலும் தேரோட்டம் மற்றும் ஆனி திருமஞ்சன தரிசனத்தன்று கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், அசைவ உணவுகடைகளை மூட கலெக்டரிடம் வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், சங்கர், சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமதாஸ், நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்புத்துறையினா், நடராஜா் கோவில் தீட்சிதா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்