கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மேம்பாலம் கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
அக்ராவரம்- மீனூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றின்குறுக்கே மேம்பாலம் கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
அக்ராவரம்- மீனூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றின்குறுக்கே மேம்பாலம் கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
கருத்து கேட்பு கூட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் அக்ராவரம் மற்றும் மீனூர் கிராமத்திற்கு இடையே கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. ஆற்றின் கரையில் அக்ராவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கெங்கையம்மன் கோவில் உள்ளது. கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் மீனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனால் அக்ராவரம்- மீனூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நபார்டு திட்டத்தின் கீழ் அக்ராவரம்-மீனூர் இடையே கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது குறித்து கருத்து கேட்புகூட்டம் நேற்று நடைபெற்றது.
பொதுமக்கள் கருத்து
குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் புவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மேம்பாலம் அமைக்கும் போது இங்குள்ள கெங்கையம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சில வீடுகள், பள்ளிக்குச் செல்லும் வழி அடைக்கப்படும் எனவும் மேம்பாலமாக கட்டாமல் தரைப்பாலமாக கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மீனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேம்பாலமாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கும், கோவிலுக்கும் பாதிப்பில்லாத வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும்போது பாதிப்பு ஏற்படாதவாறு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
மாணவர்கள் கோரிக்கை
பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இரண்டு பள்ளி மாணவர்கள் எம்.எல்.ஏ.வின் கால்களை கட்டிப்பிடித்து மழைக் காலங்களில் பள்ளிக்கு வர முடியவில்லை எனவும் விரைவாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு கண்டிப்பாக மேம்பாலம் கட்டத் தரப்படும் என உறுதி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மனோகரன், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசி இளையராஜா, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மஞ்சுளாவேல்முருகன் உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.