பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆலோசனை கூட்டம்
தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொண்டி,
தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவாடானை யூனியனில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பல்வேறு துறைகள் இணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவாடானை வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலக கள அலுவலர் வாசுகி, தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணா செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிக அளவில் இருக்கக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற மாணவர்கள், பள்ளிக்கு தொடர்ந்து வருவதில் இடர்பாடு உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கி பள்ளியில் சேர்ப்பதற்கும் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் செய்திருந்தார். ஒன்றிய பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.