சேரம்பாடியில் கலந்தாய்வு கூட்டம்:மின்சாரத்தை சோலார் மின்வேலிக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை-மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை
சேரம்பாடியில் மின்சாரத்தை சோலார் மின்வேலிக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பந்தலூர்
சேரம்பாடியில் மின்சாரத்தை சோலார் மின்வேலிக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கலந்தாய்வு கூட்டம்
பந்தலூர் அருகே சேரம்பாடி மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின்வாரியதுறை, வனத்துறை பொதுமக்களிடையே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- சிலர் விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்கள் நுழையாமலிருக்க சோலார் மின்வேலி அமைக்கின்றனர். ஆனால் அந்த மின்வேலிகளின் மூலம் வீடுகளிலிருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் மின்சாரத்தை திருடி நேரடியாக சோலார் மின்வேலி மூலம் மின்சாரத்தை பாய்ச்சுகின்றனர். இதனால் காட்டுயானைகள், சிறுத்தை, காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் நுழையும் நேரடியாக மின்சாரம் தாக்கி இறந்துவிடுகின்றன. சில நேரங்களில் மனிதர்களையும் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.
கடும் நடவடிக்கை
எனவே யாரும் சோலார் மின்வேலி என்ற பெயரில் மின்சாரத்தை திருடி வேலிகளில் பாய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது மின்சாரத்தை திருடி வேலிகளுக்கு பாய்ச்சுவதை கண்டால் உடனே மின்வாரியதுறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும்.
மின்கம்பிகள் தாழ்வான நிலையில் சென்றாலோ கம்பங்கள் பழுதடைந்தாலோ மின்வாயத் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். பழுதடைந்து காணப்பட்ட மின்கம்பங்களை மாற்றி 40 புதியமின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏதாவது குறைகள்இருந்தால் மின்வாரியதுறையிடம் புகார் தெரிவித்தால் உடனே நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் வனச்சரகர் அய்யனார், உதவி மின் பொறியாளர்கள் தமிழரசன், தர்வீஸ் கார்த்திகேசு, வனவர் ஆனந்த், கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பத்மா மற்றும் சத்தியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.