கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

Update: 2023-06-20 18:27 GMT

கரூர் அரசு கலைக்கல்லூரி

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 1,280 இடங்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

அன்று சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கும், 2-ந்தேதி இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 5-ந்தேதி பி.காம்., பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கும், 6-ந்தேதி வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 7-ந்தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. 8-ந்தேதி விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அன்றுடன் முதலாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.

மாணவர் சேர்க்கை

இதையடுத்து இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த 14-ந்தேதியும், இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு 16-ந் தேதியும் நடைபெற்றன. இந்தநிலையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று நிரப்பப்படாத 440 இடங்களுக்கான கலந்தாய்வு முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது.

முதலாமாண்டு இளங்கலை மற்றும் இளம்அறிவியல் பாடங்கள் அனைத்திற்கும் நேற்று கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்