நத்தை வேகத்தில் நகரும் கட்டுமான பணிகள்

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டுமான பணிகள் நத்தை வேகத்தில் நகர்கிறது. இதனால் கூடுதலாக நிதி ஒதுக்கி விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Update: 2023-01-22 18:45 GMT

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டுமான பணிகள் நத்தை வேகத்தில் நகர்கிறது. இதனால் கூடுதலாக நிதி ஒதுக்கி விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம்

பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் சப்-கோர்ட்டு, ஜே.எம்.1, ஜே.எம்.2, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகிய கோர்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பொள்ளாச்சி பகுதியில் குற்ற மற்றும் சிவில் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கு விசாரணை தாமதமாகிகிறது. எனவே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 10 விசாரணை அறைகள், நீதிபதிகள் அறைகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டிடம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் சப்-கோர்ட்டு அமைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 3.25 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட்டுகள் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் கட்டும் பணி ரூ.35 கோடியே 39 லட்சம் செலவில் தொடங்கியது. ஆனால் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனவே கூடுதலாக ரூ.14 கோடியே 15 லட்சம் கேட்டு பொதுப்பணித்துறை மூலம் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

கோர்ட்டுகள் இடமாற்றம்

இதற்கிடையில் சாலை விரிவாக்க பணிக்காக தற்போதைய கோர்ட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சப்-கோர்ட்டு பழைய தாலுகா அலுவலக கட்டிடத்திற்கும், ஜே.எம்.1 கோர்ட்டு சப்-கோர்ட்டு கட்டிடத்திற்கும், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் வக்கீல்கள் சங்க கட்டிடத்திற்கும் மாற்றப்பட்டது. இந்த கட்டிடங்களில் போதிய கழிப்பிட வசதி இன்றி பெண் வக்கீல்கள், கோர்ட்டுக்கு வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து வக்கீல்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பொள்ளாச்சி வக்கீல் சங்க தலைவர் துரை:

பொள்ளாச்சியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், வழக்குகள் தொடர்பாக வரும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. மேலும் இடபற்றாக்குறை உள்ளதால் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. எனவே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதற்கு தேவையான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் நகராட்சி மூலம் மொபைல் கழிப்பிட வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இட நெருக்கடி

வக்கீல்கள் சங்க இணை செயலாளர் இமயவரம்பன்:

புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டிட பணி 75 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது. தற்காலிக கட்டிடத்தில் இடநெருக்கடி காரணமாக பொதுமக்கள் உட்காருவதற்கு கூட வசதிகள் இல்லை. மேலும் கழிப்பிட வசதியும் இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர். புதிய கட்டிட பணிகளை விரைந்து முடித்தால், இந்த அவதி இருக்காது. ஆனால் பணிகள் நத்தை வேகத்தில் நடக்கிறது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

வக்கீல் அய்யப்பன்:

பொள்ளாச்சி தாலுகா அலுவலக கட்டிடத்தில் புதிய துணை சப்-கோர்ட்டுக்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் சாலை பணிக்கு பழைய கோர்ட்டு கட்டிடங்கள் இடிக்கப்படுவதால், அங்கு சப்-கோர்ட்டுக்கு அறை ஒதுக்கப்பட்டது. இதனால் துணை சப்-கோர்ட்டு அறை இல்லை. இதனால் துணை சப்-கோர்ட்டு செயல்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கழிப்பிட வசதி இல்லை

பெண் வக்கீல் தாஹீரா:

கோர்ட்டு கட்டிடங்களை இடிக்கும்போது கழிப்பிடங்களும் இடிக்கப்பட்டன. மேலும் கோர்ட்டுக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால், வழக்கு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெற முடியவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்படுகிறது. இதேபோன்று கோர்ட்டுக்கு வரும் பொதுமக்களும், பெண் வக்கீல்களும் கழிப்பிட வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். எனவே புதிய கட்டிடத்திற்கு கோர்ட்டுகளை இடமாற்றம் செய்யும் வரை தற்காலிகமாக குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்