கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி
ஏலகிரிமலையில் கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் அருகே தங்கபுரம் கிராமம் சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சங்கர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சங்கர் வீட்டின் வெளியே படுத்து இருந்தார். நள்ளிரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.
நேற்று காலை சங்கர் இல்லாததால், வீட்டு எதிரே கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி சங்கர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.