ரூ.50 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை டவுனில் ரூ.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
நெல்லை டவுனில் ரூ.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
சாலை அமைக்கும் பணி
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு குண்டும், குழியுமாக இருந்தது. இங்கு புதிய தார்சாலை ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்க உத்தரவிடப்பட்டது. தார்சாலை நெல்லை டவுன் அருணகிரி தியேட்டர் அருகில் இருந்து தொடங்குகிறது. நேற்று அருணகிரி தியேட்டர் அருகே உள்ள தெற்கு மவுண்ட் ரோட்டில் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, இளநிலை பொறியாளர் விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் லாலுகாபுரம், கிருஷ்ணபேரி வழுக்கோடை, வாய்க்கால் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் லாலுகாபுரம் கீழ தெருவில் பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பொது கழிவறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுக்கழிவறையை ஆய்வு செய்து அதை மேம்படுத்துவதற்கும், பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தெருவிளக்கு அமைப்பது, வாறுகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பழனித்தெருவில் பொது கழிவறை கட்டும் பணிகளை ஆய்வு செய்ததோடு சிறிய குடிநீர் தொட்டி அமைப்பதற்கும் அதிகாரிகளிடம் கூறினார். இதேபோல் நெல்லை டவுன் பாட்டபத்து பகுதியில் கழிவுநீர் ஓடை மற்றும் வாறுகால் வசதிகள் குறித்தும் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.
நிலைக்குழு கூட்டம்
நெல்லை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிநிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், "குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நடப்பு சொத்து வரிகளை மாநகராட்சி கணினி வசூல் மையங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம். நிலுவை சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, பாதாளச்சாக்கடை கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி செலுத்த வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர் டிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரிவிதிப்பு மற்றும் நிதிநிலைக்குழு தலைவர் சுதாமூர்த்தி நன்றி கூறினார்.