ரூ.2½ கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி
நீலகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் ரூ.2½ கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் ரூ.2½ கோடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சி பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை பூமி பூஜையை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிக மழை பெய்கின்ற காரணத்தினால், பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக நஞ்சநாடு மற்றும் இத்தலார் ஆகிய ஊராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரில் பார்வையிடப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டது.
8 இடங்களில் தடுப்புச்சுவர்
அப்போது வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் அதற்கு உரிய விவரங்கள் சேகரித்து, அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
பின்னர் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நஞ்சநாடு அம்மனட்டி கிராமத்தில் 3 பணிகள் ரூ.1.39 கோடி மதிப்பிலும், இத்தலார் ஊராட்சி பகுதியில் 5 பணிகள் ரூ.1.21 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் 8 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற இருக்கிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தக்குமார், நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.