தேனியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்தம்

தேனியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-02 21:00 GMT

தேனியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே மேம்பாலம்

தேனியில், மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு இதே நாளில் (ஆகஸ்டு 3) தொடங்கியது. இந்த மேம்பாலம் ரூ.70 கோடி செலவில், 1.2 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் இந்த பணிகள் தொடங்கின.

இந்த ரெயில்வே பாலம் அமைக்கும் பணிக்காக மதுரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்டமாக வணிக கட்டிடங்கள் அகற்றப்பட்டன. வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக மாற்று குடியிருப்பு வழங்கும் வரை அவர்கள் அங்கேயே வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் 5 மாதங்களுக்கு முன்பே அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மாற்று குடியிருப்புகள்

ஆனால் அவர்களுக்கான மாற்று குடியிருப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் வீடுகளை அகற்ற முடியாமல், மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடக்கின்றன. கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகளே இன்னும் நிறைவு பெறவில்லை. இதனால், ரெயில் வரும் நேரங்களில் தேனி நகரில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், மேம்பாலம் அமைக்கும் இடத்தின் ஓரமாக வாகனங்கள் சென்று வருவதற்கான சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதற்காக அங்கு ஏற்கனவே மக்கள் வசிக்கும் வீடுகளின் வாசல் படிக்கட்டுகள் வரை அகற்றப்பட்டு சாலை அமைக்கப்படுகிறது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியே சென்று வருவதற்கு சிரமம் அடைகின்றனர்.

திட்டச்சாலை

இதேபோல், புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சாலைக்கு வெளியேறும் பகுதிகளிலும் நெரிசல் அதிகரித்துள்ளது. பாலம் அமைக்கும் பணிக்காக அங்கு விரைவில் போக்குவரத்து தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட வேண்டிய சூழல் உருவாகும் போது, அதற்கான மாற்று திட்டச்சாலை வசதியும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் ஏற்கனவே அமைக்க முடிவு செய்யப்பட்ட திட்டச்சாலை பணியும் முடங்கியே கிடக்கிறது.

எனவே, ஆக்கிரமிப்பு அகற்றம், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்தால் தான் மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகம் எடுக்கும் என்ற நிலை உள்ளது. எனவே அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தேனி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்