மசினகுடியில் 21 ஆண்டுகளுக்குப் பின் 78 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டும் பணி தொடக்கம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

மசினகுடியில் 21 ஆண்டுகளுக்கு பின் இலவசமாக 2 சென்ட் நிலத்துடன் ரூ.2.70 லட்சம் மதிப்பில் 78 பேருக்கு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

கூடலூர்

மசினகுடியில் 21 ஆண்டுகளுக்கு பின் இலவசமாக 2 சென்ட் நிலத்துடன் ரூ.2.70 லட்சம் மதிப்பில் 78 பேருக்கு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

பூமி பூஜை

மசினகுடி ஊராட்சிமன்ற பகுதியில் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் விவசாயம், கூலி வேலை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் புதிய வீடுகள் கட்ட இடம் இல்லாததால் ஒரே வீடுகளில் 3 குடும்பங்கள் வரை வசிக்க கூடிய அவல நிலை காணபட்டது.

இதையொட்டி 2002-ம் ஆண்டு 144 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கபட்டது. அதன் பின்னர் தொகுப்பு வீடுகள் கட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசின் சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் சுமார் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கபட்டது. பின்னர் தலா 2 சென்ட் நிலத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ 2.70 லட்சம் நிதியில் 78 குடும்பங்களுக்கு வழங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியது. தொடர்ந்து பூமி பூஜை நடந்தது.

78 வீடுகள்

ஊராட்சி தலைவர் மாதேவி மோகன் தலைமையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் 78 பயனாளிகள் கலந்து கொண்டனர். பூமி பூஜைக்கு பின் பயனாளிகளுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டது. அப்போது பல ஆண்டுகளாக வீடு கட்ட இடமின்றி தவித்த மக்கள் ஆனந்த கண்ணீருடன் தங்களது இடத்தில் அமர்ந்து மகிழ்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கபட்ட 2 சென்ட் இடத்தில் வீடுகட்டும் பணியை தொடங்கி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

முன்னதாக வீடுகள் கட்டும் இடத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் ஆய்வு செய்தார். அப்போது மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாத 283 பேருக்கு நிலத்துடன் அரசு நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், அண்ணாதுரை, ஊட்டி தாசில்தார் குமர ராஜா, ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகேஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்