புதிதாக 3 இடங்களில் மேம்பாலம் கட்டுவதை கிடப்பில் போடக்கூடாது

மெட்ரோ ரெயில் திட்டத்தை காரணம் காட்டி புதிதாக 3 இடங்களில் மேம்பாலம் கட்டுவதை கிடப்பில் போடக்கூடாது என்று கருத்து கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகள் வலியுறுத்தினர்.

Update: 2022-12-24 18:45 GMT

கோவை

மெட்ரோ ரெயில் திட்டத்தை காரணம் காட்டி புதிதாக 3 இடங்களில் மேம்பாலம் கட்டுவதை கிடப்பில் போடக்கூடாது என்று கருத்து கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகள் வலியுறுத்தினர்.

போக்குவரத்து நெரிசல்

கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு உயர் மட்ட மேம்பாலங்களும், புதிதாக இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்தது.

இதற்கிடையில் அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் முக்கிய பகுதிகளாக விளங்கும் சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. ஆனால் மெட்ரோ ரெயில் திட்டத்தை காரணம் காட்டி, அந்த மேம்பால பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த பாலங்களை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தொழில் அமைப்புகள் உள்பட பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கொடிசியா, சிறு துளி, ராக், இந்திய தொழில் வர்த்தக சபை, கொங்கு குளோபல் போரம், கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ், கோவை கன்ஸ்யூமர் காஷ், வணிகர்கள் சங்கம், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம், நமது கோவை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதல்-அமைச்சர் கவனத்துக்கு...

அவர்கள், மெட்ரோ ரெயில் கோவை நகருக்கு தேவை. அதற்காக புதிதாக 3 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் உள்ள பகுதியில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கும்போது பின்பற்றப்படும் தொழில்நுட்ப பணிகளை தற்போது கட்டப்பட இருக்கும் பாலங்களுக்கும் பொருந்துமாறு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், அந்த கருத்துகள் மற்றும் விவாதங்கள் அனைத்தையும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று புதிய மேம்பாலங்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்