நெல்லையில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி மும்முரம்

நெல்லையில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-12 20:15 GMT

நெல்லையில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொருட்காட்சி

நெல்லையில் ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தையொட்டி பொருட்காட்சி நடத்துவது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மீண்டும் பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அரங்குகள் அமைக்கும் பணி

இதையடுத்து நெல்லை டவுன் வ.உ.சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து, அங்கு பொருட்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முடிவு செய்தன. தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி பூமி பூஜையுடன் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது.

அரசின் வேளாண்மை துறை, வனத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 36 அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அரங்கிலும் அந்தந்த துறையின் சார்பில் இதுவரையிலும் மாவட்டத்தில் செய்யப்பட்ட பணிகள், சாதனைகள் உள்ளிட்டவை குறித்த விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

வேளாண்மை துறை அரங்கத்தில் நெல் விதைகள், உரங்கள், வேளாண்மை துறையால் பெற்ற பயன்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். இதேபோன்று அனைத்து துறையினரும் தங்களது துறையின் பணிகள், சாதனைகளை காட்சிப்படுத்துகின்றனர்.

ராட்டினங்கள்

மேலும் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட அனைவரும் விளையாடி மகிழ பல்வேறு வகையான ராட்டினங்களும், ருசித்து மகிழ துரித உணவகங்களும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வருகிற 16 அல்லது 18-ந்தேதிக்குள் பொருட்காட்சி திறக்கப்படலாம் என்றும், அதிகபட்சம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்