அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி தொடங்கியது

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ‘தினத்தந்தி’ செய்தியால் ரூ.3½ கோடியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-11-21 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் 'தினத்தந்தி' செய்தியால் ரூ.3½ கோடியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கான உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, எக்ஸ்-ரே பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, ரத்த வங்கி, சலுகை கட்டணத்தில் சி.டி.ஸ்கேன் வசதி, ஆக்சிஜன் பிளாண்ட், சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்டவை உள்ளது. தினமும் சுமார் 250 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு

ஆனால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இதுவரை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

மேலும் கடந்த 18-ந் தேதி வெளியான கட்டுரை மூலமும் வலியுறுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் பொதுப்பணித்துறையால் அவசர சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அதி நவீன வசதிகள் கொண்ட 5 படுக்கைகள், 24 மணி நேர ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர்கள் உள்பட தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளது. மேலும் நோயாளிகள் பயன்படுத்த 2 கழிப்பிடங்கள் அமைத்து, விரைவில் திறக்கப்பட இருந்தது.

புதிய கட்டிடம்

இதற்கிடையில் கோத்தகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை ரூ.3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து மருத்துவமனை நுழைவு வாயில் அருகே இருந்த பிற பழைய கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடம் அமைக்க நிலத்தை சமப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும் கட்டுமான பணிகள் தொடங்கியதையொட்டி அந்த நுழைவு வாயில் மூடப்பட்டு, சித்த மருத்துவமனை வழியாக மருத்துவமனைக்குள் செல்லும் வகையில் நுழைவு வாயில் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதை அறிந்த கோத்தகிரி பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்