ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி; சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
கூடங்குளத்தில் ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
கூடங்குளம்:
கூடங்குளத்தில் ரூ.46½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
ராதாபுரம் யூனியன் கூடங்குளம் பஞ்சாயத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்வதற்காக சுமார் 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா கிங்ஸ்டன், பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "கூடங்குளம் பகுதியில் அணு மின் திட்ட பணி நடைபெறுவதால் வட மாநிலம் மற்றும் தமிழக சுற்றுப்புற பகுதிகளிலும் இருந்து அதிகமான மக்கள் இங்கு குடி பெயர்ந்துள்ளனர். எனவே குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைக்கரையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.
மேலும் தற்போது அவசர தேவைக்காக தினந்தோறும் டேங்கர் லாரிகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றி மக்களின் குறை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் திட்டத்தையும் செயல்படுத்தி கூடங்குளம் மக்களின் குடிநீர் பிரச்சினையை சபாநாயகர் தீர்த்து வைத்தார்.
புதிய வகுப்பறை கட்டிடம்
தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, பழைய மாணவர்கள் கூடுகை விழா ஆகிய முப்பெரும் விழா தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த சபாநாயகரை தாளாளரும், மருத்துவருமான ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் வரவேற்றனர். பள்ளியில் மேலும் அமைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பள்ளியின் முன்னாள் மாணவர் வி.திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
டி.டி.என் கல்வி குழுமதலைவர் டி.டி.என்.லாரன்ஸ் குத்துவிளக்கேற்றினார். தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லெற்றீசியா வரவேற்றார்.
விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜ்குமார், கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன், தெற்குகள்ளிகுளம் செயலாளர் சுமிலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சமூகை முரளி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கல்வி பரிசு வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தாவும், காமராஜ் பள்ளி தாளாளருமான ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.