ரூ.3 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி

ரூ.3 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-19 18:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இக்கட்டிடம் 2 தளங்களாக கட்டப்பட உள்ளது. ஒன்றிய குழு தலைவருக்கான தனி அறை, வட்டார வளர்ச்சி அலுவலருக்கான தனி அறை, பொறியாளர்களுக்கான தனி அறை, கூட்டரங்கம், பயிலரங்கம் உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் நவீன வசதிகளுடன் இக்கட்டிடம் அமையவுள்ளது. முன்னதாக அமைச்சர் சிவசங்கர் கொளத்தூர் கிராமம் முதல் அணைப்பாடி கிராமம் வரை செல்லும் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.8 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் அவர் சாத்தனூர் முழு நேர ரேஷன் கடையில் இருந்து 2.20 கி.மீ. தொலைவில் உள்ள சா.குடிக்காடு பகுதியில் 234 குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி அப்பகுதியில் பொருட்கள் வழங்குவதற்காக நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைத்தார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கீதா சங்கரி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, இமயவரம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்