ரூ.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி
மணல்மேடு அருகே ராஜன் வாய்க்காலில் ரூ.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே ராஜன் வாய்க்காலில் ரூ.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ராஜன் வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் குமாரமங்கலம், தியாகராஜபுரம், சி.புலியூர், வடக்குவெளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது உடலை ராஜன்வாய்க்காலை கடந்து கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு தூக்கிச்சென்று புதைப்பது வழக்கம்.
நீர்வரத்து இல்லாத காலங்களில் ராஜன் வாய்க்காலை சற்று எளிதாக கடந்து சென்று இறுதிசடங்குகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீர்வரத்து இருந்தால் இடுப்பளவு நீரில் உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக நீரில் உடலை சுமந்து செல்லும் அவல நிலையே உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய பாலம்
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் கிராம மக்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில், கடலங்குடி-குமாரமங்கலம் இடையே ராஜன் வாய்க்காலில் பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.5.06 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, புதிய பாலம் அமைப்பதற்கான பணியை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்டக்குழு உறுப்பினர் இளையபெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளாக நீடித்துவந்த மயான பாதை பிரச்சினைக்கு முடிவு வரவுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.