அரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி
பூலாங்குளத்துப்பட்டியில் அரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
பூலாங்குளத்துப்பட்டியில் அரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
உயர்மட்ட பாலம்
மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டை ஊராட்சி, பூலாங்குளத்துப்பட்டியில் அரியாற்றின் குறுக்கே அய்யாகவுண்டம்பட்டி சாலையில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ரூ.799 லட்சத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். அம்மாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி காந்தி அழகப்பன் வரவேற்றார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம்கருப்பையா, மணிகண்டம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் விஜயலெட்சுமி, கோட்ட பொறியாளர் வடிவேல், ஒப்பந்ததாரர் தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் அப்பீஸ்தீன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரம் (கள்ளிக்குடி), வெள்ளைச்சாமி (நாகமங்கலம்), எமல்டா லில்லிகிரேசி ஆரோக்கியசாமி (அளுந்தூர்) மற்றும் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அம்மாபேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியார் கலந்து கொண்டு, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 1,988 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
69 வாகனங்கள்
இதேபோல் திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 69 வாகனங்களை மாநகராட்சி பணிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், வருவாய்த்துறை, அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள்
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. நிச்சயம் பெற்றி பெறும். ஈரோடு நகரத்தை பொறுத்த அளவில் அடிப்படை தேவைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம். தி.மு.க. நல்ல நிலையில் உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி தோழமை கட்சிகளின் மாண்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றி இருக்கிறார். நாங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டோம். தேர்தலுக்கு போறோம். நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றார்.