கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது

நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-21 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

நீடாமங்கலம் அருகே கொத்தமங்கலம் தட்டித்தெரு இடையே, கோரையாற்றில் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு ஆற்றின் நடுவில் பில்லர் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பணிகள் நிதி நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த பாலம் கட்டும் பணி கடந்த சில வாரங்களக்கு முன்பு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை உறுதியாகவும், விரைவிலும் கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

பாலம் கட்டும் பணி விரைவில் முடிந்தால் ராயபுரம், கீழப்பட்டு, ராஜப்பையன் சாவடி, பூவனூர், சம்பாவெளி உள்ளிட்ட பகுதியில் இருந்து நீடாமங்கலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் விரைவில் சென்று வர முடியும்.

இந்த பகுதியில் இருந்து திருவாரூர், நாகை செல்லும் வாகனங்களும் எளிதில் சென்று வர முடியும். மேலும் இந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்வதால், நீடாமங்கலம் கடை வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

விரைந்து முடிக்க நடவடிக்கை

மேலும் ரிஷியூர், பெரம்பூர், முல்லைவாசல், கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மக்கள் நீடாமங்கலம் கடை வீதிக்கு செல்லாமல், இந்த பாலம் வழியாக கோவில்வெண்ணி, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், பூண்டி, தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடிக்கு செல்லலாம்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்