3,672 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி வீட்டு வசதி துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஆய்வு

திருத்தணியில் அரசு சார்பில் 3,672 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை வீட்டு வசதி-நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஆய்வு செய்தார்.

Update: 2023-02-04 08:58 GMT

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் முருகம்பட்டு திட்டப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை மக்களுக்காக பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 400 சதுரடி பரப்பளவில் 4 மாடிகளில் 1,040 குடியிருப்புகள் ரூ.135.22 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இதில் ரூ.7 லட்சம் தமிழ்நாடு அரசின் மானியமாகவும், ரூ.1.50 லட்சம் மத்திய அரசின் மானியமாகவும் வழங்கப்படவுள்ளது. பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.50 லட்சம் ஆகும்.

தாழவேடு திட்டப்பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் 400 சதுரடி பரப்பளவில் 4 மாடிகளில் 520 குடியிருப்புகள் ரூ.67.34 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.12.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.45 லட்சம் ஆகும்.

அருங்குளம் பகுதி-I திட்டப்பகுதிகளில் 410 சதுரடி பரப்பளவில் 5 மாடிகளில் 432 குடியிருப்புகள் ரூ.57.67 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13.35 லட்சம் மதிப்பீடப்பட்டுள்ளது. பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.85 லட்சம் ஆகும்.

அருங்குளம் பகுதி-II திட்டப்பகுதிகளில் 410 சதுரடி பரப்பளவில் 5 மாடிகளில் 912 குடியிருப்புகள் ரூ.119.97 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.65 லட்சம் ஆகும்.

அருங்குளம் பகுதி-III திட்டப்பகுதிகளில் 410 சதுரடி பரப்பளவில் 5 மாடிகளில் 768 குடியிருப்புகள் ரூ.99.85 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.50 லட்சம் ஆகும்.

இந்த 5 திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்தராவ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த திட்டப்பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையமும், ரேஷன் கடைகள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், சாலை, குடிநீர் மற்றும் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை உரிய நேரத்திற்குள் முடிக்க வாரிய என்ஜினீயர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வாரிய தலைமை என்ஜினீயர் ச.சுந்தரமூர்த்தி, மேற்பார்வை என்ஜினீயர் சந்திரமோகன், நிர்வாக என்ஜினீயர் செந்தாமரைக் கண்ணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்