நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 2-வது ஆலை அமைக்கும்பணி 85 சதவீதம் நிறைவு
இதுவரை 85 சதவீதம் பணிகள் முடிந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்,
சென்னை நகர மக்களின் குடிநீர்தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் இருந்து நிறைவேற்றப்படுகிறது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். எனினும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகையால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் ஆலை அமைக்கப்பட்டது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் தலா 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்து சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அடையாறு, ஆலந்தூர், கண்ணகிநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் தேவை மேலும் அதிகரித்து வந்ததால் நெம்மேலியில் உள்ள ஆலை அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 2-வது கடல் நீரை குடிநீ ராக்கும் ஆலை தொடங்க அரசு முடிவு செய்தது. அதன்படி ஜப்பான் நாட்டு தொழில் நுட்பத்துடன், ஜெர்மனி நாட்டின் ரூ.1,260 கோடி கடன் உதவியுடன் 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யக்கூடிய 2-வது புதிய ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணி வேகமாக நடந்து வருகிறது. முக்கிய கட்டிடம் கட்டுதல், கடற்கரையில் இருந்து 1கி.மீ., தூரத்தில் உள்ள ஆழ்கடல் கடல்நீரை ஆலைக்குள் கொண்டு வர பாதை அமைத்தல், ராட்சத குழாய்கள் பதித்தல், சுத்திகரிப்பு எந்திரம் அமைத்தல், ஆலைக் கழிவுகளை வெளியேற்றுதல், குடிநீர் பரிசோதனை கூடம், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இதுவரை 85 சதவீதம் பணிகள் முடிந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடைசி கட்ட பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. விரைவில் இந்த பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கடல்நீரை குடிநீராக்கும் கட்டுமான குழுவினர் கூறும்போது, நெம்மேலியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணியில் இதுவரை 85 சதவீதம் முடிந்து உள்ளன. இந்த ஆலையில் உற்பத்தி ஆகும் குடிநீரை பல்லாவரம், மேடவாக்கம் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இரும்பு குழாய்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
புதிய ஆலையில் குடிநீர் உற்பத்தியை தொடங்கி விட்டால், சென்னையின் குடிநீர் தேவையில் 50 சதவீதத்தை கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளே பூர்த்தி செய்யலாம் என்றனர்.