கட்டுமான என்ஜினீயர் கைது

ஊட்டியில் தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது, மண்ணில் புதைந்து 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கட்டுமான என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-10 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது, மண்ணில் புதைந்து 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கட்டுமான என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

மண்ணில் புதைந்து பலி

சென்னையை சேர்ந்த குமரேசன்-பத்மினி தம்பதியினருக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் சொந்தமாக இடம் உள்ளது. இவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து வீடு கட்டும் பணியை அர்ஷத் என்ற என்ஜினீயரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி வீட்டின் அருகே 35 அடி நீளம், 15 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இந்த பணியில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மாரக்கவுண்டன்புதூரை சேர்ந்த சேட்டு (வயது 54), வேலு (28) உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே பள்ளம் தோண்டும் பணிகள் முடிவடையும் தருவாயில், மண் சரிந்து விழுந்து சேட்டு, வேலு ஆகிய 2 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு கலெக்டர் அம்ரித் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை புரிதல் 304 (2) என்ற சட்டத்தின் கீழ் என்ஜினீயர் அர்ஷத் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் கட்டுமான பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும், பாதுகாப்பு இல்லாமல் மேற்கொண்டதாகவும் அர்ஷத்தை இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்