அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
கவர்னர்கள் போட்டி அரசாங்கம் நடத்தும் சூழ்நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
கோவில்பட்டி:
கவர்னர்கள் போட்டி அரசாங்கம் நடத்தும் சூழ்நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மாலை அணிவித்து மரியாதை
கோவில்பட்டியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது முழு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் அமைப்பு சட்டம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால், அரசியல் சட்டத்தை ஏற்று அதை முறையாக அமலாக்கக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் நிலைத்து நிற்கும்.
சட்டத்துக்கு ஆபத்து
2014-ம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த மத்திய பா.ஜனதா அரசால் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு பொருளாதார கொள்கை இவையெல்லாம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்கள். இதனை பா.ஜனதா அரசு தகர்த்தெறிந்து வருகிறது.
மதச்சார்பற்ற இந்தியாவை, மதச்சார்பு இந்தியாவாக பா.ஜனதா அரசு மாற்றி வருகிறது.
போட்டி அரசாங்கம்
மத்தியில் ஆளக்கூடிய பா.ஜனதா அரசு, பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, ஆட்சியை கவிழ்ப்பது, ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்றால் கவர்னரை வைத்து சீர்குலைக்கிறது.
கேரளா, தமிழகத்தில் உள்ள கவர்னர்கள் போட்டி அரசாங்கம் நடத்தி கொண்டுள்ளனர். இந்த சூழலில் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
உறுதுணையாக இருந்தார்
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது, அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்து, பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற உறுதுணையாக இருந்தார். நாடே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, அதை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார்.
திராவிட இயக்கம் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, திராவிடம் என்ற வார்த்தையே அகராதியில் இல்லை என்று சொல்லக்கூடிய கவர்னர் கருத்தை ஏற்றுக்கொள்கிறாரா? ஆட்சியில் இருந்தபோதும் ஆதரித்தார், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆதரிக்கிறார். இது தமிழக மக்களுக்கு ஒரு கேடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.