படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதி திட்டம்?

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு காரணமாகி படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதி திட்டம் தீட்டி உள்ளார். அவர் சிம்கார்டு வாங்கிய விலாசத்தில் குறிப்பிட்ட ஊட்டி ஆசிரியரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-20 18:45 GMT

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு காரணமாகி படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதி திட்டம் தீட்டி உள்ளார்.

அவர் சிம்கார்டு வாங்கிய விலாசத்தில் குறிப்பிட்ட ஊட்டி ஆசிரியரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் வெடிப்பு

கோவை கோட்டைஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷாமுபின் (வயது29) பலியானார்.

இதையடுத்து கோட்டை மேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடி மருந்து உள்பட 109 பொருட்களை கைப்பற்றினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷாவின் உறவினர் அப்சர்கான், அசாருதீன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

குக்கர் குண்டு வெடிப்பு

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள நாகுரி பகுதியில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்ப வத்தில் முகமது ஷாரிக் (வயது24) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடக மாநிலம் சிமோகா அருகே உள்ள பகுதியை சேர்ந்த இவர் தான் குக்கர் குண்டு வெடிப்புக்கு மூல காரணம் என்றும், இவர், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 2022-ம் ஆண்டு சிமோகா பகுதியில் கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு வெடிபொருள் சப்ளை செய்தவர் முகமது ஷாரிக் என்பதும் தெரியவந்துள்ளது.

கோவையில் தங்கி சதி?

இந்த நிலையில் குக்கர் குண்டு வெடிப்பு ஆசாமி முகமது ஷாரிக், கடந்த செப்டம்பர் மாதம் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் தங்கி இருந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் தும்மனட்டி பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் (28) என்பவர் சிங்காநல்லூரில் பணியாற்றி வந்துள்ளார்.

அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திய முகமது ஷாரிக், அவரது அறையில் தங்கி இருந்து உள்ளார். அப்போது அவர், சுரேந்திர னின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கி உள்ளார்.

இதை அறிந்த தனிப்படை போலீசார் சுரேந்திரனை கோவை அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மங்களூருவை சேர்ந்த போலீஸ் தனிப்படையும் கோவை வந்துள்ளது. சுரேந்திரனுக்கும், முகமது ஷாரிக்குக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகமது ஷாரிக் கோவையில் தங்கி இருந்து சதி ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒத்துப்போகும் சம்பவம்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார்.

இதேபோல்தான் மங்களூரு நாகுரி பகுதியிலும் ஓடும் ஆட்டோவில்தான் குக்கர் வெடித்து முகமது ஷாரிக் படுகாயம் அடைந்து உள்ளார்.

இந்த 2 சம்பவமும் ஒத்துப்போவதால் இருமாநில போலீசாரும் கூட்டு சேர்ந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான குறிப்புகள் கோவை ஜமேஷா முபின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. மங்களூருவில் குக்கர் வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் ஐ.எஸ். ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

ஜமேஷா முபினை சந்தித்தாரா?

எனவே கோவையில் பலியான ஜமேஷா முபினை முகமது ஷாரிக் சந்தித்து சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று கூறப்படு கிறது.

இதைத்தொடர்ந்து கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள், முகமது ஷாரிக், ஜமேஷா முபினை சந்தித்து உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகமது ஷாரிக்கின் செல்போன் எண்ணை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அவர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இயக்கத்தை வலுப்படுத்தும் திட்டம்

படுகாயத்துடன் சிகிச்சை பெறும் முகமது ஷாரிக், தன்னுடைய கூட்டாளிகளுடன் "அல் ஹிந்த் ஐ.எஸ்" என்ற அமைப்பை தொடங்கி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் வலுப்படுத்த திட்டமிட்டு இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இயக்கத்தில் தொடர்புடைய சிலரை கர்நாடக போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

தற்ேபாது, குக்கர் குண்டு வெடித்ததால் சதி அம்பலமாகி உள்ளது. கோவையில் ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் போல் செயல்பட்டு இறந்தார்.

அதேபோல் மங்களூருவிலும் முகமது ஷாரிக் ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டை வெடிக்கச்செய்து தற்கொலை தாக்குதல் போல் செயல்பட்டுள்ளார்.

எனவே கோவை மற்றும் மங்களூரு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதால் என்.ஐ.ஏ. மற்றும் இருமாநில போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

தற்போது இந்த இயக்க ஆதரவாளர்கள் யார்-யார்? என்ற பட்டியலை தயாரித்து தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்