பாலக்கோடு அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பம்-பஸ் நிலையத்தில் தவிக்க விட்ட வாலிபருக்கு வலைவீச்சு

Update: 2023-02-01 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி, பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பிளஸ்-1 மாணவி கர்ப்பம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவியும், பாலக்கோடு அருகே உள்ள பொரத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து மகன் கவியரசன் (வயது 20) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் மாணவி கர்ப்பமானாள்.

பெற்றோர் அதிர்ச்சி

இந்தநிலையில் நேற்று அந்த மாணவி, தர்மபுரி பஸ் நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், அங்கு சென்று அவரிடம் விசாரித்தனர். அப்போது தான் கவியரசனை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கர்ப்பமாக உள்ளதால், கணவர் தன்னை பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்றதாகவும் மாணவி கூறினார். இதனைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து, மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கி, பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்