தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை
தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. ராதாபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் 15 மாதங்களில் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. ராதாபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் 15 மாதங்களில் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்து வரும் உள்ளாட்சித்துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.
கூட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குர்ராலா, தனுஷ்குமார் எம்.பி., மாவட்ட கலெக்டர்கள் கார்த்திகேயன் (நெல்லை), செந்தில்ராஜ் (தூத்துக்குடி), துரை ரவிச்சந்திரன் (தென்காசி), முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, மார்க்கண்டேயன், பழனி நாடார், சண்முகையா, சதன் திருமலைகுமார், மேயர்கள் சரவணன் (நெல்லை), ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), மகேஷ் (நாகர்கோவில்), மாநகராட்சி கமிஷனர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, தினேஷ்குமார், ஆனந்த் மோகன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் நடராஜன், மேற்பார்வை பொறியாளர் கோபால், செயற்பொறியாளர் ராமலட்சுமி, நிர்வாக பொறியாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
இதில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாநகராட்சிகள், 4 மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து அவர், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
கடல்நீரை குடிநீராக்க...
கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. அவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. புதிய மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டு வருகிறது.
மழை இல்லாத காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் மூலம் ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் திண்டுக்கல், ராமநாதபுரம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் வழியாக குழாய் பதித்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை நடந்து வருகிறது.
ராதாபுரம் தொகுதியில்...
தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு. மத்திய அரசே இந்த திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக எனக்கு விருது வழங்கியுள்ளது. ராதாபுரம் தொகுதியில் ரூ.65 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 3 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் 15 மாதங்களில் அந்த பணிகள் முடிவடையும்.
அதற்கு முன்பாகவே ஒரு மாதத்தில் தற்காலிகமாக வேறு ஒரு திட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நிறைவேறிய பின்னர் இடையன்குடி, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட 11 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும். நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறப்பு விழா காணப்பட்ட பாளையங்கோட்டை பல்நோக்கு அரங்கம், பேட்டை சரக்கு முனையம் உள்ளிட்டவை விரைவில் செயல்பட தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.